2019 உலகக்கிண்ணப் போட்டியுடன் ஓய்வு: டு பிளஸ்ஸி அறிவிப்பு

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனான டு பிளஸ்ஸி 2019 உலகக் கிண்ணப் போட்டியுடன் அனைத்துலகக் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுபெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்துக் கூறிய அவர், “2019 உலகக்கோப்பை வரை எல்லா வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன். பிறகு ஓய்வு பெற்றுவிடுவேன். நான் மட்டுமல்ல, மேலும் வீரர்கள் சிலரும் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வுபெறும் மனநிலையில் உள்ளார்கள். “டெஸ்ட் தொடர்களில் இருந்து விலகுவது என்பது டிவில்லியர்ஸின் முடிவு. அவர் 12 ஆண்டுகளாக நாட்டுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அவர் டெஸ்ட் ஆடவேண்டும் என்பதே என் விருப்பமும். ஆனால் அவர் முடிவை மதிக்கிறேன். அவர் தகுந்த ஓய்வு எடுத்துக்கொண்டு 2019 உலகக்கிண்ணப்போட்டியின்போது புத்துணர்ச்சியுடன் விளையாடுவார்,” என்றார்.