இந்தியாவிடம் தோற்றதால் பாகிஸ்தான் வீரர் வாகாப் ரியாஸ் இணையத்தில் ஏலம்

வெற்றியாளர் கிண்ண கிரிக்கட் தொடரில் கடந்த 4ஆம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்­தான் அணிகள் மோதின. இதில் முதலில் பந்தடித்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்கள் குவித்தது. பாகிஸ்தான் பந்து வீச்சை இந்திய வீரர்கள் துவம்சம் செய்தனர். குறிப்பாக வாகாப் ரியாஸ் பந்தை பவுண்டரிகளாக விரட்டினர். இவர் 8.4 ஓவரில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 87 ஓட்டங்கள் வாரி வழங்கினார். ஒரு ஒவருக்குச் சராசரியாக 10.03 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்தார்.

பின்னர் பந்தடித்த பாகிஸ்தான் 33.4 ஓவரில் 164 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது. இந்தியா டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவிடம் தோல்விய டைந்த பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்­ளது. இந்தியாவிற்கு எதிரான போட்டியில் காயம் அடைந்ததால் வாகாப் ரியாஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 87 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த வாகாப் ரியாஸ் மீது பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம் கொண்டனர். அதில் ஒரு ரசிகர் அவரை இணை­யத்தில் ஏலத்திற்குக் கொண்டு வந்தார்.

ஜூன் 4ஆம் தேதி நடந்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வாகாப் ரியாஸின் அதிரடி ஆட்டம். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்