உலக ஹாக்கி: இந்திய அணிக்கு 2-வது வெற்றி

லண்டன்: உலக ஹாக்கி லீக் அரைஇறுதிச் சுற்று போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவைத் தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. உலக ஹாக்கி லீக் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதி வருகின்றன. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் இந்தியா-கனடா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கனடாவைத் தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. இந்திய அணியில் சுனில் 5-வது நிமிடத்திலும், ஆகாஷ் தீப்சிங் 10-வது நிமிடத்திலும், சர்தார்சிங் 18-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்காட்லாந்தை வென்று இருந்தது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணிக்குத் தொடங்குகிறது.