எவர்ட்டனுக்குத் திரும்புகிறார்

லண்டன்: மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவிற்காக அதிக கோல்களை (253) அடித்திருக்கும் 31 வயதான வெய்ன் ரூனி (படம்) மீண்டும் எவர்ட்டன் குழுவிற்குத் திரும்பவிருப்பதாக ‘தி சன்’ செய்தி வெளியிட்டுள்ளது. 2017-=18 காற்பந்துப் பருவத்திற்கு முந்திய பயிற்சிக்காக யுனைடெட் குழு வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா செல்லவிருக்கிறது. அந்தக் குழுவில் ரூனி இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. 2002ஆம் ஆண்டு தனது 17 வயதில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவிற்கு எதிரான போட்டியில், எவர்ட்டன் சார்பில் அறிமுகமானார் ரூனி. 2004ஆம் ஆண்டு வரை அக்குழுவிற்காக 67 போட்டிகளில் விளையாடிய இவர், 15 கோல்களையும் அடித்தார்.

அதன்பின் 26.5 மில்லியன் பவுண்டு தொகைக்கு யுனைடெட் குழுவிற்குத் தாவிய இவர், கடந்த 13 ஆண்டுகளாக அக்குழுவின் முன்னணி ஆட்டக் காரராகத் திகழ்ந்து வந்தார். இருந்தபோதும் கடந்த பருவத்தில் திடலில் களமிறங்க அதிகமான வாய்ப்புத் தரப்படவில்லை என்பதால் எவர்ட்டனுக்குத் திரும்ப ரூனியும் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்துடன், ஆர்சனல் குழுவில் இடம்பெற்றுள்ள பிரெஞ்சுத் தாக்குதல் ஆட்டக்காரர் ஒலிவியர் ஜிரூடும் எவர்ட்டனுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொரு பிரெஞ்சு ஆட்டக்காரரான அலெக்சண்ட்ரே லக்காஸெட்டை 45 மி. பவுண்டு விலைகொடுத்து லியோன் குழுவிடம் இருந்து ஆர்சனல் வாங்கியிருப்பதால் தாக்குதல் வரிசையில் ஜிரூடுக்கு இடம் கிடைக்காமல் போகலாம். ஆகையால், அவரை 20 மி. பவுண்டு விலைகொடுத்து வாங்க எவர்ட்டன் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையே, முன்னணி ஸ்பானிய குழுவான ரியால் மட்ரிட்டுக்காக கடந்த பத்தாண்டுகளாக விளையாடி வந்த போர்ச்சுகல் தற்காப்பு ஆட்டக்காரர் பெப்பே அடுத்த பருவத்தில் இருந்து துருக்கியின் பெசிக்டஸ் குழுவிற்காக விளையாட இருக்கிறார். ரியால் மட்ரிட்டுக்காக விளையாடியபோது ஸ்பானிய லீக் பட்டத்தை மூன்று முறையும் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை மூன்று முறையும் பெப்பே வென்றிருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon