சுடச் சுடச் செய்திகள்

தலைவராக முதல் போட்டியில் சதம் அடித்த ஜோ ரூட்

லார்ட்ஸ்: அணித் தலைவராக அறிமுகமான போட்டியில் சதம் அடித்து இங்கிலாந்தின் ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் ரூட். இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவராக இருந்த குக் பதவி விலகியதைத் தொடர்ந்து ஜோ ரூட் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் இங்கிலாந்து அணி முதல் போட்டியில் நேற்று லார்ட்ஸ் கிரிக்கெட் அரங்கில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாடியது. பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணி பந்தடிப்பைத் தேர்வு செய்தது. அதன்படி குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். குக் 3 ஓட்டங்களிலும் ஜென்னிங்ஸ் 8 ஓட்டங்களிலும் அதன்பின் வந்த பேலன்ஸ் 20 ஓட்டங்களிலும் பேர்ஸ்டோவ் 10 ஓட்டங்களிலும் வெளியேறினார்கள்.

இதனால் இங்கிலாந்து அணி 76 ஓட்டங்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந் தது. 5வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்து தொடர்ந்து விளையாடினார்கள். பென் ஸ்டோக்ஸ் 108 பந்துகளில் 8 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 114 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து ஜோ ரூட் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் 150 பந்துகளை சந்தித்து சதம் அடித்தார். இதன் மூலம் தலைவராக அறிமுகமான போட்டியிலேயே ஜோ ரூட் சதம் அடித்து அசத்தியுள்ளார். தற்போதைய சிறந்த வீரர்களான விராத் கோஹ்லி, ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்மித் ஆகியோரும் அணித் தலைவர்களாக அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்துள்ளனர்.