கோஹ்லி சதம், இந்திய பந்துவீச்சாளர்கள் பதம்

ஜமைக்கா: இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லியின் சதமும் கை கொடுக்க அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் எதிரணியைப் பதம் பார்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி கொண்டது இந்தியா. விராத் கோஹ்லி மொத்தம் 111 ஓட்டங்கள் எடுத்து ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார். மறுபக்கம் இந்திய பந்து வீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களை ஓட்டம் எடுக்க விடாமல் திக்குமுக்காடச் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை 3=1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. ஜமைக்காவில் நேற்று நடந்த போட்டியில் பூவா தலையாவில் வென்று முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை எடுத்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கைல் ஹோப் 46 (50) ஓட்டங்களும் ஷாய் ஹோப் 51 (98) ஓட்டங்களும் எடுத்தனர். 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய இந்திய அணி 36.5 ஓவர்களி லேயே வெற்றி இலக்கை எட்டியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அணித் தலைவர் கோஹ்லி 111 (115) ஓட்டங்களைக் குவித்தார். தினேஷ் கார்த்திக் 50 (52) ஓட்டங்களும் ரகானே 39 (51) ஓட்டங்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோசப், பிஸீ ஆளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் முதல் போட்டி மழை காரணமாக தடையானது. மற்ற மூன்று போட்டிகளில் இந்தியா 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடைசி போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.