இளம் விளையாட்டாளர்களைக் கொண்டுள்ள நைஜீரிய அணி, குரோவேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அப்பாவித்தனமாக நடந்துகொண்டதாக அதன் பயிற்றுவிப்பாளர் ஜெர்னாட் ரோஹர் கருத்துரைத்துள்ளார். தனது அணி, நேற்று முன்தினம், குரோவேஷியாவிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் நைஜீரியாவின் சொந்த கோல் ஒன்றும் பெனால்டியில் அணித்தலைவர் லூக்கா மோட்ரிச் அடித்த மற்றொரு கோலும் குரோவேஷியாவுக்கு வெற்றியைத் தந்தது. நைஜீரியா, எப்போதும் போல இப்போதும் உலகக் கிண்ண ஆட்டத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஆர்சனலுக்காக விளையாடும் அலெக்ஸ் இவோபியும் செல்சி அணி விளையாட்டாளர் விக்டர் மோசஸ் நைஜீரியும் அணியில் இருந்தபோதும் அது எந்த கோலையும் போடவில்லை. "குரோவேஷியா நம்மைவிட சிறப்பாக விளையாடியது என்பதையும் எனது இளம் விளையாட்டாளர்கள் சில தவறுகளைச் செய்துவிட்டனர் என்பதையும் நாங்கள் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்," என்று ரோஹர், ரஷ்யாவின் காலினிக்ராட் மாநிலத்தில், செய்தியாளர் களிடம் தெரிவித்தார். குரோவேஷியா அடுத்து அர்ஜெண்டினா அணியைச் சந்திக்கும்.
பந்தைத் தலையால் முட்டி அப்புறப்படுத்தினார் நைஜீரிய தற்காப்பு ஆட்டக்காரர் வில்லியம் துரூட்ஸ் எக்கோங். படம்: ஏஎஃப்பி