தென்கிழக்காசியாவைச் சேர்ந்த தாய்லாந்து, இந்தோனீசியா, வியட்னாம் ஆகிய நாடுகள், 2034 ஆம் ஆண்டில் நடைபெறும் உலக் கிண்ணக் காற்பந்து இறுதிச் சுற்றை ஏற்று நடத்த விண்ணப்பிக்கக் கூடும். அவற்றில் ஏதேனும் ஒரு நாட்டுக்கு போட்டிகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் மலேசியாவும் அதில் இணையலாம் என்று மலேசியாவின் பாஹாங் மாநில மன்னரும் ஃபிஃபா செயற்குழு உறுப்பினருமான திரு அப்துல்லா சுல்தான் அகமது ஷா தெரிவித்திருக்கிறார். மலேசிய அரசாங்கமும் மலேசிய காற்பந்துச் சங்கமும் சம்மதித்தால் இது சாத்தியமாகலாம் என்றார் அவர்.
2026ஆம் உலகக் கிண்ணப் போட்டிகளை ஏற்று நடத்தும் விண்ணப்பத்தில் வெற்றியடைந்த அமெரிக்கா, கனடாவுடனும் மெக் சிக்கோவுடனும் இணைந்து செயல் பட்டதைச் சுட்டினார் துங்கு அப்துல்லா. மாஸ்கோவில் நடைபெற்ற ஃபிஃபா மன்றச் சந்திப்பிலிருந்து அண்மையில் மலேசியாவுக்குத் திரும்பிய அவர், ஆசியானைச் சேர்ந்த மூன்று அல்லது நான்கு நாடுகள் அதுபோலவே செய்யலாம் என்று கூறினார்.