ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆடவர் கபடிக் குழு அரையிறுதியுடன் நடையைக் கட்ட, அவர்களைவிட ஒருபடி முன்னேறி இறுதிப்போட்டி வரை சென்ற மகளிர் குழுவும் தங்கப் பதக்கத்தை இழந்து ஏமாற்றமளித்தது. இதற்குமுன் நடந்த அனைத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளி லும் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்தியாவே தங்கம் வென்றது. இந்த நிலையில், இம்முறையும் அவ்விரு குழுக்க ளையும் வெளியேற்றி பெருமிதம் கொண்டது ஈரானியக் குழுக்கள். இந்திய கபடி அணிகளின் இந்த வீழ்ச்சியில் இந்தியர் இருவ ருக்குப் பங்கிருப்பது வியப்பூட்டும் தகவல்.
இந்தியக் குழுவின் முன்னாள் பயிற்றுவிப்பாளரான ஷைலஜா ஜெயினே ஈரானிய மகளிர் குழு வின் இப்போதைய பயிற்றுவிப்பாளர். அதேபோல, 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய ஆடவர் குழுவை 24-23 என்ற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து அதிர்ச்சி அளித்த தென்கொரிய அணிக்கும் இந்தியர் ஒருவரே பயிற்றுவிப்பாள ராக இருந்து வருகிறார். 1990 ஆசிய விளையாட்டுப் போட்டி களில் தங்கம் வென்ற இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்த ஆஷான் குமார் சங்வான்தான் அவர்.