வெற்றிக்கொடி நாட்டி வரும் இந்தியா

வெலிங்டன்: வீட்டில் புலி, வெளியில் எலி என எள்ளி நகையாடிய காலமெல் லாம் மலையேறிப் போய், வெளிநாடு களிலும் வெற்றிக்கொடியைப் பறக்க விட்டு வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியாவில் முதன் முறையாக டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடர்களை வென்று வரலாறு படைத்த விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்திலும் வாகை சூடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற இந்தியா, நேற்று நடந்த இரண்டா வது ஆட்டத்திலும் 90 ஓட்ட வித்தி யாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்தடித்தது. ரோகித் சர்மாவும் ‌ஷிகர் தவானும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.

இருவரும் சேர்ந்து 154 ஓட்டங்களைச் சேர்த்தனர். முதல் விக்கெட்டுக்கு நூறு ஓட்டங் களுக்கு மேல் எடுத்தது இது 14வது முறை. தவான் 66 ஓட்டங்களிலும் ரோகித் 87 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் வந்த கோஹ்லி (43), ராயுடு (47), டோனி (48*), கேதார் ஜாதவ் (22*) ஆகியோரும் பொறுப்பாக ஆட, இந்திய அணி 300 ஓட்டங்களைத் தாண்டியது. இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்களைக் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி தொடக்க முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டு களைப் பறிகொடுத்தது. எட்டாவது வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 57 ஓட்டங்களை விளாசினார்.

ஆனாலும் நியூசிலாந்து அணியைக் கரைசேர்க்க அது போதுமானதாக இல்லை. 40.2 ஓவர்களிலேயே அவ்வணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட் டங்களை மட்டும் எடுத்து தோற்றது. குல்தீப் யாதவ் நான்கு விக்கெட்டு களைச் சாய்த்தார். ரோகித் ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார். ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது.