யூரோ 2020 தகுதிச் சுற்று ஆட்டங்கள்: ஸ்பெயின் காட்டில் கோல் மழை

காடிட்ஸ்: யூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்றில் நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மால்ட்டா குழுவை 7-0 எனும் கோல் கணக்கில் ஸ்பெயின் பந்தாடியது. யூரோ தகுதிச் சுற்றில் ‘எஃப்’ பிரிவில் இடம்பெற்றிருக்கும் ஸ்பெயினுக்கு கிடைத்துள்ள ஆக மகத்தான வெற்றி இதுவாகும்.  இந்த ஆட்டத்தில் ஏழு வெவ்வேறு ஸ்பானிய ஆட்டக்காரர்கள் ஆளுக்கு ஒரு கோலைப் போட்டனர்.

நார்வே, சுவீடன் ஆகிய குழுக்களுடன் கடைசியாக விளையாடிய இரு தகுதிச் சுற்று ஆட்டங்களிலும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்ட ஸ்பெயின், அடுத்த ஆண்டு நடைபெறும் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. எனினும், தரத்தை நிரூபிக்காத வண்ணம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிட்டதாக கருதிய விமர்சகர்களின் வாயை இப்போது ஸ்பெயின் அடைத்துவிட்டது.

மால்ட்டா உடனான ஆட்டத்தில் தலைசிறந்த தாக்குதல் ஆட்டத்தை ஸ்பானிய வீரர்கள் வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் முதற்பாதியின் நடுப்பகுதியில் முதல் கோலைப் போட்டு ஸ்பெயினின் அபார வெற்றிக்கு அடிக்கல் நாட்டினார் அல்வாரோ மொராட்டா. அட்லெட்டிகோ மட்ரிட் குழுவுக்கும் நாட்டிற்கும் தாம் கடைசியாக விளையாடியுள்ள ஏழு ஆட்டங்களிலும் அவர் கோல்களை அடித்துள்ளார். 

குறிப்பிடும்படியாக, இந்த ஆட்டத்தில் ஸ்பானிய வீரர்கள் போட்ட ஐந்து கோல்களும் ஆட்டத்தின் பிற்பாதியில்தான் வந்தன. அந்த கோல்களைப் போட்டவர்களில் சிலர் புதுமுக ஆட்டக்காரர்களாவர்.

ஆட்டத்தை முத்தாய்ப்பாக முடித்து வைக்கும் விதமாக ஸ்பெயினின் ஏழாவது கோலை அற்புதமாக போட்டார் ஜேசுல் நவாஸ். பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து அவர் உதைத்த பந்து எதிரணியின் வலையைச் சீண்டியது.

இத்தாலிய குழுவின் வெற்றிப் பயணம் தொடர்கிறது

யூரோ தகுதிச் சுற்றில் ‘ஜே’ பிரிவில் இடம்பெற்றுள்ள இத்தாலியின் வெற்றிப் பயணம் தொடர்கிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற போஸ்னியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில் அக்குழு வாகை சூடியது.

ஸ்பெயினைப் போலவே அடுத்த ஆண்டின் இறுதிப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட இத்தாலிக்கு இன்னும் பசி தீர்ந்த பாடில்லை. இதுவரை தான் விளையாடியுள்ள ஒன்பது ஆட்டங்களில் அனைத்தையும் வென்றுள்ள இத்தாலி, அதிகபட்சமான 27 புள்ளிகளைப் பெற்று ‘ஜே’ பிரிவின் முதலிடத்தை வலுவாக்கிக்கொண்டுள்ளது.

இதே பிரிவில் இடம்பெற்றுள்ள ஃபின்லாந்து, நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் லிச்டென்ஸ்டெய்ன் குழுவை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றது. 

இத்தாலிக்கு அடுத்து 18 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் உள்ள ஃபின்லாந்து, அடுத்த ஆண்டு இறுதிப் போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்துகொண்டது.