முதல் டெஸ்ட்டை கைப்பற்றியது இந்திய அணி

இந்தூர்: பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் மூன்றாவது நாளான நேற்று, முதல் இன்னிங்சை 493 ஓட்டங்களில் இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்தது. இதையடுத்து பங்ளாதேஷ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. 

ஆனால், ஆரம்பம் முதலே பங்ளாதேஷ் வீரர்களால் இந்திய அணியினரின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தன.

பங்ளாதேஷ் அணியில் ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக முஷ்ஃபிகுர் ரஹிம் 64 ஓட்டங்களும் மெஹிடி ஹசன் மிராஜ் 38 ஓட்டங்களும் லிதன் தாஸ் 35 ஓட்டங்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் 213 ஓட்டங்களுடன் பங்ளாதேஷ் அணி சுருண்டது.

இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில் முகம்மது ஷமி அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார். 

அவருக்கு அடுத்து அஸ்வின் மூன்று விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இப்போட்டியில் இரட்டை சதமடித்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.