லண்டன்: நடப்பு இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் சறுக்கி வரும் ஆர்சனல் குழுவை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்ல விரும்புகிறார் அதன் புதிய நிர்வாகி மிக்கெல் அர்டேட்டா.
அவர் எடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, மத்திய திடல் ஆட்டக்காரர் கிரானிட் ஸாக்காவை ஆர்சனலில் தக்கவைத்துக்கொள்ள அர்டேட்டா விரும்புகிறார்.
ஆர்சனலைவிட்டு ஸாக்கா வெளியேறக்கூடும் என்ற பேச்சு நிலவு வரும் வேளையில், அவரைத் தக்க வைக்கும் முயற்சியில் அர்டேட்டா இறங்கியுள்ளார்.
ஆர்சனல் கடைசியாக விளையாடிய லீக் ஆட்டத்தில் செல்சியுடன் மாதியது. தனது சொந்த மண்ணில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்றது.
உடல்நலக் குறைவு காரணமாக அந்த ஆட்டத்தில் ஸாக்கா பங்கேற்கவில்லை.
ஆர்சனலின் முன்னாள் நிர்வாகி உனாய் எமெரியின் தலைமைத்துவத்தின்கீழ், குழுத் தலைவர் என்ற பொறுப்பு ஸாக்காவிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆட்டம் ஒன்றில் ஆர்சனல் ரசிகர்கள் ஸாக்காவை தூற்றியதைத் தொடர்ந்து அவர் கடுங்கோபத்திற்கு ஆளானார்.
இந்நிலையில், திறமைவாய்ந்தவராகக் கருதப்படும் ஸாக்கவிற்கு உற்சாகமளித்து அவரது திறனை வெளிக்கொணர விரும்புகிறார் அர்டேட்டா.