சுடச் சுடச் செய்திகள்

'நியூசிலாந்துக்கு நெருக்கடி கொடுப்போம்'

பெங்களூர்: விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையடுத்து இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. 

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி பெங்களூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை வென்ற பிறகு இந்திய அணித் தலைவர் கோஹ்லி செய்தியாளர்களிடம் பேசினார்.

“கடந்த ஆண்டு நியூசிலாந்தில் நாங்கள் விளையாடிய விதம் (டி20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் தோற்ற இந்திய அணி, ஒருநாள் போட்டி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது) எங்களுக்கு நிறைய நம்பிக்கையை அளித்துள்ளது.

“ நாங்கள் விளையாடிய விதம் பல்வேறு சாதகமான அம்சங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு போன்று இந்த முறையும் எங்களால் சிறப்பாகச் செயல்பட முடியும். வெளிநாட்டு மண்ணில் உள்ளூர் அணிக்கு நெருக்கடி அளிக்கும்போது மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

“உள்ளூரில் தொடரை வெல்வது ஒருவிதமான மகிழ்ச்சிதான். எங்களது முதல் தர ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது எதிரணிக்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்த முடியும். 

கடந்த ஆண்டில் நாங்கள் நியூசிலாந்து தொடரில் இதேபோன்று நெருக்கடி அளித்தோம். நடுவரிசை ஓவர்களில் நெருக்கடி அளித்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் நியூசிலாந்து அணிக்கு முதல் பந்தில் இருந்தே நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறோம்.

“ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் எங்களுக்கு நெருக்கடி அளிக்கப்பட்டபோதும்  வெற்றி கண்டோம். இந்த வெற்றி எங்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் ஆட்டத்தில் இருந்தே சிறப்பாகச் செயல்பட வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் பூவா தலையாவில் நாங்கள் தோற்றபோதிலும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி சிறப்பாக விளையாடினோம். கடந்த 8 மாதங்களில் இளம் வீரர்கள் விளையாடி வருகின்றனர். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் நாங்கள் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் தொடரை இழந்தோம். அப்போது இருந்த  ஆஸ்திரேலிய அணியைவிட  தற்போதைய ஆஸ்திரேலிய அணி வலுவானது. 

“சிறப்பாக விளையாடினால் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கை இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி வரை நம்பிக்கையுடன் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். அதனை நாங்கள் சரியாகச் செய்தோம்,” என்று கோஹ்லி தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon