லண்டன்: தொலைவில் இருந்து டெக்லன் ரைஸ் அற்புதமானதொரு கோலை அடிக்க, நேற்று முன்தினம் பின்னிரவு நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டம் ஒன்றில் வெஸ்ட் ஹேம் யுனைடெட் குழு 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லா குழுவைப் போட்டுத் தாக்கியது.
சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தில் தோற்றுப்போனதால் வில்லா குழுவின் நிர்வாகி டீன் ஸ்மித்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆட்டத்தின் ஏழாம் நிமிடத்தில் பந்துடன் வலப்புறத்தில் இருந்து கோல் கட்டத்திற்குள் நுழைந்த பென் ஜான்சன், இடது காலால் வலையின் மூலையில் பந்தைத் தள்ளி கோலடித்து, வெஸ்ட் ஹேம் குழுவிற்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
அடுத்த சில நிமிடங்களிலேயே ஜேரட் பொவன் மூலம் அந்த முன்னிலை இரட்டிப்பாகி இருக்கும். ஆனால், அவ்வாய்ப்பு மயிரிழையில் பறிபோனது. அதன்பின், 34வது நிமிடத்தில் வில்லாவின் ஆலி வாட்கின்ஸ் மூலம் வந்த கோலால் ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
ஆனாலும், அடுத்த நான்காவது நிமிடத்திலேயே கோலடித்து, இழந்த முன்னிலையை மீட்டுத் தந்தார் வெஸ்ட் ஹேமின் டெக்லன் ரைஸ்.
இரண்டாம் பாதியில் எப்படியும் மீண்டு, எழுச்சி பெறலாம் என்று வில்லா நினைத்திருக்க, அவ்வணியின் எஸ்ரி கோன்சா சிவப்பு அட்டைபெற்று வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அதன்பிறகு 80வது நிமிடத்தில் பாப்லோ ஃபோர்னல்சும் 84வது நிமிடத்தில் பொவனும் ஆளுக்கு ஒரு கோலடிக்க, வெஸ்ட் ஹேமின் வெற்றி உறுதியானது.
தற்போது வெஸ்ட் ஹேம் 20 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் 10 புள்ளிகளுடன் வில்லா 15வது இடத்திலும் உள்ளன.