சென்னை: ஒலிம்பிக் திடல்தட விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கம் வென்று தந்த நீரஜ் சோப்ராவிற்கு (படம்) ஐபிஎல் டி20 கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.1 கோடி (S$182,000) பரிசளித்து ஊக்குவித்துள்ளது.
ஈட்டியெறியும் வீரரான நீரஜ், இவ்வாண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் 87.58 மீ.தொலைவிற்கு ஈட்டியை எறிந்து, முதலாவதாக வந்து, தங்கத்தைத் தட்டிச் சென்றார்.
துப்பாக்கிச் சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவிற்கு அடுத்து, தனிநபர் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியரும் இவர்தான்.
இதனையடுத்து, 23 வயதான நீரஜுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்று முன்தினம் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கியது. அதனுடன், தமது பெயர் அச்சிடப்பட்ட சென்னை அணிச் சீருடையும் நீரஜுக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக, ஈட்டி எறிவது போலவும் 87.58 என்ற சாதனை எண்ணும் ஒட்டப்பட்ட, புத்தம் புதிய மகிந்திரா எக்ஸ்யுவி700 காரை நீரஜ் சோப்ராவிற்கு மகிந்திரா நிறுவனம் பரிசளித்தது. அந்த காருடன் தாம் இருக்கும் படத்தைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நீரஜ்.