ரோம்: உள்ளூர்க் காற்பந்து லீக் போட்டிகளில் 400 கோல்களைப் போட்டு சாதித்துள்ளார் சுவீடன் நாட்டின் தாக்குதல் ஆட்டக்காரர் ஸ்லாட்டன் இப்ராகிமோவிச், 40.
தற்போது இத்தாலிய லீக்கில் ஏசி மிலான் அணிக்காக விளையாடி வரும் ஸ்லாட்டன், நேற்று முன்தினம் ஏஎஸ் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் முதல் கோலை அடித்தார். இது, இத்தாலிய லீக்கில் இவர் அடித்த 150 கோலாகவும் அமைந்தது.
இந்த ஆட்டத்தில் மிலான் குழு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, நடப்பு லீக் பருவத்தில் 11 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 31 புள்ளிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது மிலான் குழு. முதலிடத்தில் இருக்கும் நேப்போலி குழுவும் அதே புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தில் அது முன்னிலையில் இருக்கிறது.