லண்டன்: முன்னணி இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவின் நிர்வாகி நூனோ ஸ்பிரிட் சான்டோ (படம்) பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு 0-3 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் குழுவிடம் தோற்றுப்போனது.
இது, கடைசியாக ஆடிய பத்து லீக் ஆட்டங்களில் ஸ்பர்ஸ் குழுவிற்குக் கிட்டிய ஐந்தாவது தோல்வி. இதனால் அக்குழு பட்டியலில் எட்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.
ஸ்பர்ஸ் குழுவின் நிர்வாகிப் பதவியில் இருந்து ஜோசே மொரின்யோ நீக்கப்பட்டபின், கடந்த ஜூன் மாதம் அக்குழுவுடன் ஈராண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் 47 வயதான நூனோ. ஆனாலும், நான்கு மாதங்களில் 17 ஆட்டங்களுடன் அக்குழுவுடனான இவரது பயணம் முடிவிற்கு வந்துவிட்டது.
முன்னதாக, இவர் கடந்த நான்கு பருவங்களாக இன்னொரு பிரிமியர் லீக் குழுவான உல்வ்ஸ் குழுவின் நிர்வாகியாகச் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.