பெர்காமோ: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இதுவரை மான்செஸ்டர் யுனைடெட்டை காப்பாற்றி வந்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று நடைபெற்ற போட்டியிலும் யுனைடெட்டுக்கு கைகொடுத்து உதவினார்.
நேற்று அதிகாலை அட்டலான்டாவுடன் நடைபெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்ட முடிவில் கோல் போட்டு 1-1 என சமநிலை காண உதவிய ரொனால்டோ ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 91வது நிமிடத்தில், தமது இரண்டாவது கோலை போட்டு மான்செஸ்டர் யுனைடெட் 2-2 என சமநிலை காண வைத்தார்.
சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் இதுவரை யுனைடெட் சார்பாக நான்கு ஆட்டங்களில் ஐந்து கோல்கள் போட்டு தன்னை ஈடு இணையற்ற வீரராக முன்னிறுத்தியுள்ளார். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் டுவான் ஸப்பாட்டா என்பவர் கொடுத்த பந்தை கோல் வலைக்குள் ஜோசிப் இலிசிச் என்பவர் போட அட்டலான்டா முன்னிலை பெற்றது. ஆட்ட ஆரம்பத்தில் மூன்று தற்காப்பு வீரர்களைக் கொண்டு விளையாடிய யுனைடெட் வரான் என்ற தற்காப்பு வீரர் காயம் காரணமாக வெளியேறியதும் பழையபடி நான்கு தற்காப்பு வீரர்கள் என தனது உத்தியை மாற்றிக்கொண்டது. மற்றோர் தற்காப்பு வீரரான விக்டர் லிண்டலாவ் என்பவரும் காயம் காரணமாக விளையாட முடியாத நிலை ஏற்படவே பல நாட்களுக்கு விளையாடாமல் இருந்த எரிக் பாயி என்ற வீரர் களமிறக்கப்பட்டார்.
யுனைடெட் நிர்வாகியான சோல்சியாரை நேற்று காப்பாற்றியது எரிக் பாயி என்று கூறினால் அது மிகையாகாது. அவர் இல்லை எனில் மேலும் ஒன்றிரண்டு கோல்கள் யுனைடெட்டுக்கு எதிராகப் போயிருக்கக்கூடும் என்பதே காற்பந்து ரசிகர்களின் கருத்து.
பின்னர், இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் 56வது நிமிடத்தில் ஸப்பாட்டா யுனைடெட் தற்காப்பு அரணை உடைத்து தமது பங்குக்கு ஒரு கோல் போட்டு அட்டலான்டாவை மீண்டும் முன்னிலை பெற வைத்தார்.
எல்லாம் முடிந்தது, யுனைடெட்டை இந்த ஆட்டத்தில் காப்பாற்ற முடியாது என யுனைடெட் ரசிகர்கள் சோர்ந்துபோன நிலையில், மேசன் கிரீன்வுட் அனுப்பிய பந்தை அட்டலான்டா கோல் எல்லைக்கு வெளியே இருந்து ரொனால்டோ வீறுகொண்டு உதைக்க அதுவே யுனைடெட்டை காப்பாற்றி ஆட்டத்தை 2-2 என முடிய வைத்தது.