மால்மோ: சாம்பியன்ஸ் லீக்கின் மற்றோர் ஆட்டத்தில் ஸ்வீடனை சேர்ந்த மால்மோ என்ற குழுவை நேற்று எதிர்கொண்டது இங்கிலாந்தின் செல்சி குழு. செல்சியின் முன்னணித் தாக்குதல் வீரர்களான ரொமேலு லுக்காகு, திமோ வெர்னர் ஆகிய இருவருமே காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் சென்ற பருவத்தின் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை எடுக்கக் காரணமான காய் ஹாவெர்ட்ஸ் என்ற ஜெர்மானிய வீரரும் நேற்றைய ஆட்டத்தில் திறம்பட ஆடவில்லை என காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், ஸியெச், அலோன்சோ, கிறிஸ்டியன்சன் போன்ற வீரர்கள் கோல் போடும் அளவுக்கு திறம்பட விளையாடாத நிலையில், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கேலம் ஹட்சன் ஒடோய் என்பவர்
கைகொடுத்தார். அவர் ஸியெச் என்ற வீரருக்கு குறிபார்த்து உதைத்த பந்தை ஸியெச் மிக எளிதாக கோல் போட்டு செல்சிக்கு வெற்றி தேடித் தந்தார். அந்த ஒரு சில விநாடிகள் விளையாட்டு செல்சியை நேற்றைய ஆட்டத்தில் காப்பாற்றியது. இந்த வெற்றி குறித்து கருத்துரைத்த செல்சி நிர்வாகி தாமஸ் டுக்கல், "எங்களுக்கு வேண்டியது வெற்றி ஒன்றுதான், அதைப் பெற்றுவிட்டோம்," என்று அகமகிழ்ந்தார்.