ஆண்கள் கோலோச்சும் ஒரு துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார் விரைவில் 35 வயதைத் தொடவிருக்கும் திருவாட்டி பிளெஸ்ஸி ரெவின்.
கிரிக்கெட் விளையாட்டில் போட்டியின்போது ஓட்டம், விக்கெட் உள்ளிட்ட புள்ளிவிவரங்களைக் குறித்து வைக்கும் பதிவாளர் (ஸ்கோரர்) பணியை இவர் செய்து வருகிறார்.
இந்தியாவின் கேரளாவில் பிறந்த திருவாட்டி பிளெஸ்ஸி, சிங்கப்பூரில் வசித்தபோது தற்செயலாக ‘ஸ்கோரர்’ வேலைக்கு அறிமுகமானார்.
ஆனாலும், அவ்வேலையில் இவர் காட்டிய பேரார்வம், இன்று அரபு நாடுகளில் அப்பணியைச் செய்யும் ஒரே பெண் எனும் நிலைக்கு இவரை உயர்த்தியுள்ளது.
பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), மகேலா ஜெயவர்தனே (இலங்கை), பிரெட் லீ (ஆஸ்திரேலியா) போன்ற உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலரும் இவருடன் நேரம் செலவிட்டு, இவரது பணியை மெச்சியுள்ளனர்.
“அனைத்துலக கிரிக்கெட் மன்ற (ஐசிசி) ‘ஸ்கோரர்’ பட்டியலில் இடம்பெற விரும்புகிறேன். ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) அதிகாரபூர்வ ஸ்கோரராக இருக்க விரும்புகிறேன். நான் பணத்திற்காக இப்பணியைச் செய்யவில்லை. ஆனால், கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்து மகிழவே விரும்புகிறேன்,” என்றார் திருவாட்டி பிளெஸ்ஸி.
அண்மையில் அபுதாபியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது ஸ்கோரராக இவர் பணிபுரிந்தார்.
இந்தியாவிலும் உலகிலும் இவரைப்போல பல பெண் ‘ஸ்கோரர்’கள் இருந்தாலும், அவர்களில் முதன்மை (elite) பட்டியலில் இடம்பிடிக்க விரும்புகிறார்.
பள்ளியில் படித்தபோது இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளைத் தொலைக்காட்சியில் காண ஆர்வம் கொண்டிருந்த இவர், அண்மையில் அபுதாபியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக் கிண்ணப் போட்டியின்போது ஸ்கோரரராகப் பணிபுரிந்தார்.
திருச்சியில் மூன்றாண்டுகள் இளங்கலை கணினி அறிவியல் படித்தபோது தமிழும் கற்றுக்கொண்டார். பின்னர் பெங்களூரில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
“முன்னர் கிரிக்கெட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், 2011ல் திருமணம் முடிந்து, சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்தேன். என் கணவர் ரெவின் வர்கீஸ் இந்தியாவில் மாவட்ட அளவிலும் சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.
“அப்படி ஒருநாள் அவர்கள் விளையாடியபோது அவர்களது அணியின் ஸ்கோரர் வரவில்லை. அதனால், என்னால் அப்பணியைச் செய்ய முடியுமா என்று அணியின் மேலாளர் கேட்டார். நானும் ஒத்துக்கொண்டேன். ஸ்கோரிங் குறித்த சில முக்கிய அம்சங்களை அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அதுதான் தொடக்கம்,” என்று திருவாட்டி பிளெஸ்ஸி நினைவுகூர்ந்தார்.
சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கம் நடத்திய ‘ஸ்கோரிங்’ பயிற்சியை முடித்து, சான்றிதழும் பெற்றார் இவர். அதன்பின் உள்ளூரில் நடந்த போட்டிகளுக்கு இவர் ஸ்கோரராக நியமிக்கப்பட்டார்.
“அப்போது சில சிறிய தவறுகளைச் செய்தேன். அடுத்த போட்டியில் இருந்து அதிகாரபூர்வ ஸ்கோரரின் அருகில் அமர்ந்தேன். தமது வேலையைக் கூர்ந்து கவனித்து, ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளும்படி அவர் என்னிடம் சொன்னார். 19 வயதிற்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணத்தின்போது பெரிய திருப்பம் கிடைத்தது,” என்றார் திருவாட்டி பிளெஸ்ஸி.
2013ல் மும்பைக்கும் பின்னர் 2015ல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கும் இவரது குடும்பம் இடம்பெயர்ந்தது.
தாளில் குறித்து வைக்கும் பழைய முறையிலும் புதிய மின்னணு முறையிலும் ஸ்கோரிங் பணியைச் செய்வதில் வல்லவர் இவர்.
2018 ஆசிய கிண்ணப் போட்டிகளின்போது திடலிலுள்ள மின்னணு ஸ்கோர் பலகையில் ஸ்கோரிங் செய்யும் பணி இவர்வசம் ஒப்படைக்கப்பட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளைப் பொறுத்தமட்டில் இதுவே இவருக்கு முதல் அனுபவம்.
“கணவர் ரெவின் கிரிக்கெட்மீது கொண்டுள்ள பேரார்வமே என்னை இப்பணியில் ஈடுபட ஊக்கமளித்து வருகிறது. நான் ஸ்கோரராக இருப்பதில் அவருக்கு மகிழ்ச்சி,” என்று கூறும் திருவாட்டி பிளெஸ்ஸி, இப்போது அபுதாபியில் நடக்கும் போட்டிகளில் மட்டும் ஸ்கோரிங் பணியை மேற்கொள்கிறார் - நன்றி: மாத்ருபூமி