கைகூடாதுபோன அரையிறுதி வாய்ப்பு; 'ராசியில்லாத அணி' என்ற முத்திரை தொடர்கிறது
ஷார்ஜா: திறமையான அணி என்ற போதும் தென்னாப்பிரிக்க அணிக்கும் உலகக் கிண்ணத்திற்கும் 'ராசியில்லை' என்ற நிலை தொடர்கிறது.
ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் ஓமானிலும் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் அவ்வணி 'சூப்பர் 12' சுற்றுடன் வெளியேறியது.
இத்தனைக்கும், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளைப்போல ஐந்தில் நான்கு போட்டிகளில் அவ்வணி வென்றிருந்தது. ஆனாலும், இம்முறை நிகர ஓட்ட விகிதம் அதற்கு எமனாய் அமைந்தது.
நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி பத்து ஓட்ட வித்தியாசத்தில் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியை மண்ணைக் கவ்வச் செய்தது.
இங்கிலாந்து அணி நல்ல ஓட்ட விகிதத்துடன் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி அதனை அதிக ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவுசெய்தது.
இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக்கும் ரீசா ஹென்ரிக்சும் களமிறங்கினர்.
இரண்டு ஓட்டங்களுடன் ஹென்ரிக்ஸ் நடையைக் கட்ட, டி காக்குடன் இணைந்து ராஸி வான் டெர் டுசன். இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 71 ஓட்டங்களைச் சேர்த்த நிலையில், 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் டி காக்.
அதன்பின் எய்டன் மார்க்ரம் திடலில் அடியெடுத்து வைக்க, தென்னாப்பிரிக்க அணியின் ஓட்ட எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்தது. இறுதியில், 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்களை எடுத்தது. வான் டெர் டுசன் 94 ஓட்டங்களையும் மார்க்ரம் 52 ஓட்டங்களையும் விளாசி, இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, இங்கிலாந்து அணியை 133 ஓட்டங்களுக்குமேல் எடுக்கவிடாமல் தடுத்தால் தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிக்கு முன்னேறலாம் என்ற நிலை ஏற்பட்டது.
ஆனால், ஜேசன் ராய் (20), ஜோஸ் பட்லர் (26), மொயீன் அலி (37), டேவிட் மலான் (33), லியம் லிவிங்ஸ்டன் (28) ஆகியோர் அதிரடியாக ஓட்டம் குவித்ததால் தென்னாப்பிரிக்க அணியின் அரை இறுதிக் கனவு கலைந்துபோனது.
இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை எடுத்துத் தோற்றபோதும் முதல்நிலையை அது கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.
அதிரடியாக ஆடி மிரட்டிய வார்னர்
முன்னதாக நடந்த ஆட்டத்தில், தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாகப் பந்தடித்து, 56 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவிக்க, ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியைத் தோற்கடித்தது.
முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அவ்வணியின் தலைவர் கைரன் பொல்லார்ட் 44 ஓட்டங்களைக் குவித்தார்.
அடுத்து பந்தடித்த ஆஸ்திரேலிய அணியில் வார்னருக்கு மிட்செல் மார்ஷ் (53 ஓட்டங்கள்) நல்ல ஒத்துழைப்பு கொடுக்க, 20 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே வெற்றி அதன்வசமானது.
ஆப்கான், பங்ளாதேஷ் நேரடி தகுதி
இதற்கிடையே, 2022ல் ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி20 உலகக் கிண்ணத் தொடரின் 'சூப்பர் 12' சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. இலங்கையும் வெஸ்ட் இண்டீசும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆட வேண்டும்.