லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் பிரைட்டன் அண்ட் ஹாவ் அல்பியான் - நியூகாசல் யுனைடெட் குழுக்கள் நேற்றுப் பின்னிரவில் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
முற்பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு மூலமாக லியாண்ட்ரோ டிரோசர்ட் அடித்த கோலால் பிரைட்டன் குழு முன்னிலைக்குச் சென்றது.
ஆனாலும், பிற்பாதியில் நியூகாசல் குழுவின் ஐசக் ஹெய்டன் வலைக்கு அருகே இருந்து கோல் அடிக்க, ஆட்டம் சமனுக்கு வந்தது.
இந்த ஆட்டத்துடன் நியூகாசல் குழுவின் இடைக்கால நிர்வாகியான கிரேமி ஜோன்ஸ் அப்பதவியிலிருந்து விடைபெற்றார்.
அக்குழுவின் புதிய நிர்வாகியாக எடி ஹாவ் விரைவில் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் நியூகாசல் குழுவினர் போராட்ட உணர்வை வெளிப்படுத்தியதாகக் கூறிய ஜோன்ஸ், நல்ல ஆட்டக்காரர்களைக் கொண்ட குழுவிற்கு ஹாவ் பொறுப்பேற்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நடப்பு லீக்கில் இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் நியூகாசல் குழு, வெறும் ஐந்து புள்ளிகளுடன் பட்டியலில் கடைசியில் இருந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
இரு புள்ளிகளை இழந்த செல்சி
முன்னதாக, சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்தில், 18 ஆம் நிலையில் இருக்கும் பர்ன்லி குழுவுடன் 1-1 என்று சமநிலை கண்டது செல்சி.
கய் ஹாவர்ட்ஸ் 33வது நிமிடத்தில் தலையால் முட்டி அடித்த கோலால் செல்சி முன்னிலை பெற்றது. ஆயினும், ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்தபோது பர்ன்லியின் மட்டேய் வித்ரா கோல் அடித்து, செல்சியின் வெற்றிக் கனவைக் கலைத்தார். இதனால் இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.
ஆனாலும், 26 புள்ளிகளுடன் செல்சி முதலிடத்தில் நீடிக்கிறது.