இந்தியாவின் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவரான தாமுவுக்கு லண்டனில் இம்மாதம் 5ஆம் தேதி உலக தமிழ்ச் சங்கத்தின் சார்பாக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலகளாவிய உணவு, விருந்தோம்பல், சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், செஃப் தாமு என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. 'கேட்டரிங்' துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்ட முதல் விருது இதுவாகும்.
உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள தாமு, இத்துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். மூன்று கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.
"என்னுடைய பல ஆண்டுகால கடின உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு நான் பெற்றுள்ள விருதே முன்னுதாரணம்," என்று செஃப் தாமு குறிப்பிட்டுள்ளார்.