உணவின் சுவையை அதிகரிப்பதுடன் உணவைத் தொடும்போது கூடுதல் மென்மைத் தன்மையையும் தரும் நெய்யில் ஊட்டச்சத்துகளும் ஏராளமாக உள்ளன.
பருப்பு, போளி, ரொட்டி பரோட்டா, மோதகம், அல்வா என ஒவ்வொரு உணவிலும் நெய் ஒரு சிறப்புச் சுவையைச் சேர்க்கிறது.
மக்கள் பலரும் இந்நெய்யை உட்கொள்வதைத் தவிர்க்கிறார்கள். ஏனெனில், உடல் எடையை அதிகரித்துவிடும் என்ற அச்சம் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால், உண்மையில், நெய்யில் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் கூறுகள் ஏராளம் உள்ளன.
நெய்யில் புரதம், ஆரோக்கியத்துக்குத் தேவையான நல்ல கொழுப்புகள், வைட்டமின் ஏ, ஈ, கே ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன.
ஒருவரின் தோல், முடி, செரிமானம், இதய ஆரோக்கியத்திற்கும் நெய் நன்மை பயக்கிறது.
வெள்ளை நிற நெய் எருமைப் பாலில் இருந்தும் மஞ்சள் நிற நெய் பசுவின் பாலில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன.
வெண்ணிற எருமை நெய்
மஞ்சள் நிற நெய்யுடன் ஒப்பிடும்போது வெண்ணிற நெய்யில் அதிக கொழுப்புச் சத்து இருப்பதால், இதை நீண்ட நாட்களுக்குப் பதப்படுத்தி வைக்கலாம். இது எலும்புகளைப் பராமரிக்கவும் எடை அதிகரிக்கவும் இதய தசைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. எருமை நெய்யில் மெக்னீசியம், கால்சியம், ஃபாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய கூறுகளும் நிைறந்து உள்ளன.
மஞ்சள் நிற பசு நெய்
பசு நெய் பெரியவர்கள், குழந்தைகளின் உடல்பருமனைக் குறைக்க உதவுகிறது. அத்துடன், செரிமானத்துக்கும் எளிதானது. பசு நெய்யில் மட்டுமே ஏ2 புரதம் உள்ளது. அத்துடன், பசுநெய்யில் எண்ணற்ற அளவில் புரதம், தாதுக்கள், கால்சியம், வைட்டமின்கள் உள்ளன. பசு நெய் இதயம் நன்றாகச் செயல்பட உதவுகிறது. ஆபத்தை விளைவிக்கும் இரத்தக் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
எது சிறந்தது?
இரண்டு வகையான நெய்யும் நிறத்தில் வேறுபட்டாலும் உடல், மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இரண்டிலும் ஒரே அளவிலான கொழுப்பு உள்ளது. எருமை நெய்யை விட பசு நெய் பெரும்பாலான மக்களால் விரும்பப் படுவது. பசு நெய்யில் கரோட்டின் வைட்டமின் ஏ இருப்பதால் கண், மூளையின் செயல்பாட்டிற்கும் நல்லது. செரிமானத்திற்கும் உகந்தது. பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, ஆண்டிஆக்சிடண்ட் பண்புகளையும் கொண்டுள்ளது.
பசு நெய்யை விட எருமை நெய்யில் அதிக கொழுப்பும் கேலரிகளும் உள்ளன. இது சளி, இருமல், சளி பிரச்சினைகளுக்கு உதவுகிறது. மூட்டுகளைப் பாதுகாத்து, விரைவில் மூப்படைவதைத் தடுக்கிறது.