லண்டன்: ஆஸ்டன் வில்லாவின் புதிய நிர்வாகியான முன்னாள் லிவர்பூல் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்டீவன் ஜெரார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிவர்பூல் மீது வலுவான பற்று இருந்தாலும் ஆஸ்டன் வில்லாவின் நிர்வாகி என்ற முறையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது உறுதி என்று அவர் கூறினார்.
கடந்த பருவத்தில் கிளாஸ்கோ ரேஞ்சர்ஸ் குழுவின் நிர்வாகியாக ஜெரார்ட் செயல்பட்டார். அவரது தலைமையின்கீழ் அக்குழு ஸ்காட்லாந்து லீக் காற்பந்துப் போட்டியில் வாகை சூடியது.
11 ஆட்டங்கள் விளையாடிய நிலையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் ஆஸ்டன் வில்லா 16வது இடத்தில் உள்ளது. இதே நிலை நீடித்தால் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு அடுத்த பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாட முடியாத நிலை ஆஸ்டன் வில்லாவுக்கு ஏற்படக்கூடும். இதன் காரணமாக அதன் நிர்வாகியாக இருந்த டீன் ஸ்மித் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக ஜெரார்ட் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஆஸ்டன் வில்லாவின் நிலை மேம்பட தம்மால் ஆன அனைத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக ஜெரார்ட் கூறினார்.
ஐரோப்பிய போட்டிகளில் ஆஸ்டன் வில்லா மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அதன் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
ஆனால் இப்போதைக்கு ஆஸ்டன் வில்லாவை ஆட்டங்களில் வெற்றி பெற வைப்பதே தமது இலக்கு என்றார் ஜெரார்ட். கடந்த ஐந்து லீக் ஆட்டங்களில் ஆஸ்டன் வில்லா தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
"ஆட்டங்களில் வெற்றி பெற்றால்தான் சிறப்பான நிலையை அடைய முடியும். ஐரோப்பிய போட்டிகளுக்குத் திரும்புவதே ஆஸ்டன் வில்லாவின் நீண்டகால இலக்கு. ஆனால் அந்தக் கனவு எப்போது நனவாகும் என்று இப்போது சொல்ல முடியாது.
"ஆனால் குறுகியகால இலக்குகளில் கவனம் செலுத்துவது முக்கியம். அடுத்து பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குகிறோம். மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பி பட்டியலில் முன்னேற வேண்டும்," என்றார் ஜெரார்ட்.