மெல்பர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து டிம் பெய்ன் விலகியுள்ளார்.
தம்முடன் பணியாற்றிய பெண் ஊழியருக்குத் தகாத குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவருக்கு எதிராகப் புகார் செய்யப்பட்டிருந்தது.
அதுகுறித்து விசாரணை நடத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம், பெய்ன் எந்த விதிமுறையையும் மீறவில்லை என்று தீர்ப்பளித்தது.
இருப்பினும், பெய்ன் பதவி விலகியுள்ளார். அவரது பதவி விலகலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம் ஏற்றுக்கொண்டது.
"நான் விதிமுறைகளை மீற வில்லை என்று மன்றம் தீர்ப்பளித்துள்ளது. என் மீது புகார் செய்யப்பட்டபோது நடந்தவற்றைப் பற்றி எண்ணி வருந்தினேன். இன்றும் அதைப் பற்றி நினைக்கும்போது வேதனையாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து எனது மனைவியிடமும் குடும்பத்தாரிடமும் பேசினேன். அவர்கள் என்னை மன்னித்து ஆதரவு வழங்கினர். அதற்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
2017ஆம் ஆண்டில் நான் செய்த செயலால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவராக இருப்பதற்கான தகுதியை இழந்துவிட்டேன்," என்று டாஸ்மேனிய மாநிலத் தலைநகரம் ஹோபார்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பெய்ன் மனந்திறந்தார்.
டிம் பெய்னின் பதவி விலகலை மன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. புதிய அணித் தலைவருக்கான தேடல் தொடங்கியுள்ளது.
"ஆஸ்திரேலிய அணி வீரர்களில் யார் அந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பதை அடையாளம் காணும் பணியில் நாங்கள் தீவிரமாக இறங்கியுள்ளோம்," என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம் கூறியது.