லண்டன்: புதிய அத்தியாயத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது இங்கிலீஷ் பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட். இவ்வணியின் நிர்வாகியாக இருந்த ஒலே குனார் சோல்ஷியார் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு சென்ற வாரம் யுயேஃபா சாம்பியன்ஸ் லீக்கில் நன்றாக ஆடி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. தற்போது மைக்கல் கேரிக் தற்காலிகமாக நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார். மிகவும் திறமைசாலியானவர் எனக் கருதப்படும் ரால்ஃப் ரான்யிக் எந்நேரமும் அடுத்த நிர்வாகியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் இப்பருவம் முடியும்வரை ரான்யிக் பதவியில் இருப்பார்.
சுமார் இரண்டு மாதங்களாக அவதிப்பட்ட யுனைடெட்டிற்குத் தற்போது எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் குறுக்கே வருகிறது பிரிமியர் லீக் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் செல்சி. இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் இன்றிரவு மோதவுள்ளன. யுனைடெட் அணியில் லியூக் ஷோ, ஃபிரெட் போன்ற சில முக்கியமான விளையாட்டாளர்கள் காயமடைந்துள்ளனர். "நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கவேண்டும். நாங்கள் (அணி) வலுவாக இருப்பதுடன் ஆட்டத்தில் இறங்க ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்று நம்பிக்கை தெரிவித்தார் கேரிக்.
செல்சியிலும் சில முக்கியமான வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பென் சில்வெல் மோசமாகக் காயமடைந்துள்ளார். "அடுத்த ஆறு வாரங்களில் அவரின் (சில்வெல்லின்) காயம் சரியாகிவிடுமா என்பதும், அவ்வாறு இல்லாவிடில் அதற்குப் பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதும் தெரியவரும்," என்றார் செல்சி நிர்வாகி தாமஸ் டூக்கல்.
யார் இல்லாவிட்டாலும் செல்சிக்குப் பிரச்சினை இல்லை. யார் இருந்தாலும் யுனைடெட்டிற்குத் திண்டாட்டம். இதுவே கடந்த சில வாரங்களின் நிலவரம். இதை வைத்துப் பார்க்கும்போது வெற்றி நிச்சயம் செல்சிக்குத்தான் என்ற உணர்வு எழும். எனினும், நிர்வாகியாக இருக்கவுள்ள குறுகிய காலத்தில் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் முயற்சியில் கேரிக் இறங்கலாம்.