நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் பிரான்சின் கிலியன் எம்பாப்பே இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
புதன்கிழமை (ஜூலை 1) அதிகாலை நடந்த ஆட்டத்தில், சுவீடனை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
ஆட்டத்தில் எம்பாப்பே இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இதன்மூலம் உலகக் கிண்ணப் போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசேயை (16 கோல்கள்) முந்தியுள்ள அவர், அர்ஜென்டினாவின் லயனல் மெஸ்ஸியைவிட (19 கோல்கள்) ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார்.
தமது முதல் கோலை அடித்த பிறகு, திடலின் எல்லைக் கோட்டிற்கு ஓடிச் சென்ற எம்பாப்பே, தாயாரின் மறைவு காரணமாக இதற்கு முந்தைய ஆட்டத்தைத் தவறவிட்டு அண்மையில் அணிக்குத் திரும்பிய பயிற்றுவிப்பாளர் டிடியே டெஷாம்சை ஆரத்தழுவினார்.
அணிக்காக பிராட்லி பார்கோலாவும் ஒரு கோலடிக்க, 2026 உலகக் கிண்ணத் தொடரில் பிரான்சின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
அடுத்த சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) பராகுவே அணியை பிரான்ஸ் எதிர்கொள்கிறது. ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு முறை வெற்றியாளரான ஜெர்மனியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து, பின்னர் பெனால்டி வாய்ப்பில் வீழ்த்தி பராகுவே அதிர்ச்சியளித்திருந்தது.
நார்வே, மெக்சிகோ வெற்றி
மற்றோர் ஆட்டத்தில், நார்வேயின் நட்சத்திர ஆட்டக்காரர் எர்லிங் ஹாலண்ட் மீண்டும் ஒருமுறை நாயகனாக உருவெடுத்துள்ளார். அவரின் வெற்றிக் கோலால், 1998க்குப் பிறகு முதன்முறையாக உலகக் கிண்ணக் காற்பந்தின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு நார்வே தகுதிபெற்றுள்ளது. இத்தொடரில் ஹாலண்ட் அடித்த ஐந்தாவது கோல் இது.
ஐவரி கோஸ்ட்டுக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் நார்வே 2-1 என்ற கணக்கில் வென்றது. அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய நார்வே பயிற்றுவிப்பாளர், ஹாலண்டிற்குப் புகழாரம் சூட்டினார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அடுத்த சுற்று ஆட்டத்தில் பிரேசிலுடன் நார்வே மோதுகிறது.
மற்றோர் ஆட்டத்தில் எக்குவடோரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய மெக்சிகோ, நாக்-அவுட் சுற்றில் 40 ஆண்டுகளில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
1986ல் தனது சொந்த மண்ணில் பல்கேரியாவை வீழ்த்தியதற்குப் பிறகு, நாக்-அவுட் சுற்றில் மெக்சிகோவின் முதல் வெற்றி இது.

