இலவச பானங்கள் வழங்கிய ஜூரோங் மருத்துவ மைய அதிகாரிகள்; நோயாளி பாராட்டு

ஜூரோங் மருத்துவ மையத்தில் பரிசோதனைக்குக் காத்திருந்த நோயாளிகளுக்கு இலவசமாக சூடான பானங்கள் வழங்கிய அதிகாரிகளைப் பாராட்டியுள்ளார் ‘ஸ்டோம்ப்’ இணையத்தள வாசகர் நூரஸ்லான். 

கண் பரிசோதனைக்காக நேற்று காலை 11 மணிக்குச் சென்ற அவர், தமது வரிசை எண் அழைக்கப்படும் வரை காத்திருக்கும் கூடத்தில் அமர்ந்திருந்தார். 

அதே கூடத்தில் அமர்ந்திருந்தவர்களுக்கு நல்லுள்ளம் படைத்த தாதியர், பாதுகாப்பு அதிகாரிகள்  பானங்கள் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டியைக் கொண்டுவந்து தேனீர், காப்பி, மைலோ பானங்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். 

முதல் முறையாக அந்த மருத்துவ மையத்திற்குச் சென்ற அவருக்கு ஆச்சரியம் மிகுதியாக இருந்ததாகத் தெரிவித்தார். 

வேறு மருத்துவ மையங்களில் இதுபோன்ற சேவையைக் கண்டதில்லை என்று கூறிய அவர், அங்கு இருந்த இரண்டு மணி நேரத்தில் தொடர்ந்து அதிகாரிகள் பானங்கள் வழங்கியதைப் பெருமிதத்துடன் கூறினார். 

அன்பான இந்தச் செயலைப் பெரிதும் பாரட்டிய அவர், அது ஒரு புதுமையான அனுபவம் என்றும் புகழாரம் சூட்டினார். 

செய்தி, படம்: ஸ்டோம்ப்