கரப்பான் பூச்சிக்காக மின்னஞ்சல் புகார் செய்த தெம்பனீஸ் குடியிருப்பாளர்  

கலாசார, சமூக, இளையர்துறை; போக்குவரத்து அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்ற செயலாளரும் தெம்பனீஸ் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு பே யாம் கெங் ஓய்வில்லாத வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

அவருக்குக் கிடைத்த கரப்பான் பூச்சி பற்றிய மின்னஞ்சலை அவர் எளிதில் தட்டிக் கழித்திருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை விசாரிப்பதில் மும்முரம் காட்டியுள்ளார். 

நேற்று முன்தினம் இச்சம்பவம் குறித்துத் திரு பே தமது ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் பதிவுச் செய்திருந்தார்.  

தெம்பனீஸ் குடியிருப்பாளர் ஒருவர் தமது வீட்டின் அருகில் உள்ள படிக்கட்டில் ஓர் உயிருள்ள கரப்பான் பூச்சி இருந்ததாக மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை திரு பே யாம் கெங்கிடம் அனுப்பியுள்ளார். தமது வட்டார நகர மன்றத்திற்கு கரப்பான் பூச்சி பற்றி தெரிவித்து இரண்டு மணி நேரம் கழித்தும் அந்தக் கரப்பான் பூச்சி இன்னும் அங்கு இருந்ததாக அம்மினஞ்சலில் அவர் கவலையுடன் குறிப்பிட்டிருந்தார். 

“இந்தப் புகாரைப் படிக்கும்போது, இதைவிடப் பெரிய பிரச்சினைகளுக்கு என் கவனம் செல்லவேண்டும் என்று அறிந்தேன். அப்பகுதியில் கரப்பான் பூச்சிகளின் தொல்லை அதிகம் உள்ளதா? நகர மன்றம் எவ்வாறு அதன் நேரடி அழைப்பை மேம்படுத்தலாம்?”
“நேரடி தொலைபேசி அழைப்பு எண்ணைத் தொடர்புகொண்டதற்கும் கரப்பான் பூச்சியின் இருப்பிடத்தைப் படம் எடுத்து தகவல் அனுப்பியதற்கும் அந்த குடியிருப்பாளருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்,” என்று தம் ஃபேஸ்புக் பதிவில் கூறினார் திரு பே யாம் கெங்.           

செய்தி, படம்: ஸ்டோம்ப்