சென்னை: தமிழ்நாட்டில் கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் அருகில் அமைந்துள்ள 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அண்மையில் அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்புக்கு இணங்க இதுவரை 436 கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், அமைச்சர் விக்னேஷ் சனிக்கிழமை (மே 23) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
“இதுவரை 436 மதுபானச் சில்லறை விற்பனைக் கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களை மூடுவதற்குத் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று தமிழக அரசு தெரிவித்தது.
மதுக்கடைகளும் அவற்றுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களும் இரவு 10 மணிக்கு மூடப்பட வேண்டும் என்றும் மதுப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்கும் கடை ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் விதிமீறலுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

