சென்னை: மாநிலம் முழுவதும் பரவலாகக் காணப்படும் நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) நடைபெற்றது.
அப்போது பேசிய கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், “தமிழகம் முழுவதும் மாடுகள், நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தபோது, “தமிழகத்தில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதை அடுத்து, சென்னையில் உள்ளதைப் போல் நாய்கள் இனக் கட்டுப்பாட்டு மையத்தை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க உள்ளோம்.
“பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ், நாய்கள் மற்றும் மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை. சில இடங்களில் மாடுகள் பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளர்கள் கோபமடைகின்றனர்.
“மாடுகள், நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களிடம் நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.

