சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஸ்டாலின், நட்சத்திரத் தொகுதிகளின் ஒன்றான சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏறக்குறைய 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு மொத்தம் 82,110 வாக்குகளையும் மு.க.ஸ்டாலின் 72,988 வாக்குகளையும் பெற்றனர்.
திரு ஸ்டாலின் 1984ல் முதன்முறையாக தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியே கிடைத்தது.
1989ல் அதே தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். 1991ல் மீண்டும் தோல்வியே மிஞ்சியது. பிறகு 1996, 2001, 2006 என்று தொடர்ந்து மூன்று முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
கடந்த 2011, 2016 தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தற்போது மூன்றாவது முறையாக அங்கு போட்டியிட்டுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் எனத் தொடர்ந்து அரசியல் களத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டிப்பிடித்த அவர், அதிக அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.
தொய்வின்றி அரசியல் பயணம் தொடரும்: ஸ்டாலின்
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன். எனவே லட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக்கூடியவன் நான்,” என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளுங்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

