தேர்தல் முடிந்து திருப்பூர் திரும்பும் வட மாநிலத் தொழிலாளர்கள்

தேர்தல் முடிந்து திருப்பூர் திரும்பும் வட மாநிலத் தொழிலாளர்கள்

1 mins read
ddf46e4f-6201-4dc2-a6f5-9556e3845f38
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர் சென்ற வடமாநிலத் தொழிலாளர்கள் தேர்தல் முடிந்ததும் திருப்பூருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்

திருப்பூர்: கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது.

வாக்களிப்பதற்காக சொந்த மாநிலங்களுக்குச் சென்றிருந்த வட மாநில ஊழியர்கள் இப்போது தமிழகம் திரும்புகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரான திருப்பூரில் மட்டும் மூன்று லட்சத்திற்கு அதிகமான வட மாநில ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

தேர்தலுக்காக வடமாநிலத்தவர் சொந்த ஊர்களுக்குச் சென்றதால் திருப்பூரில் பெரும்பாலான நிறுவனங்களில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர் ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் வந்துசேர்ந்தனர்.

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பின்னலாடைத் தொழிற்சாலைகளில் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர்.

அவர்கள் முதலாளியிடம் எதிர்த்துப் பேசாமல் சொல்லும் வேலையை விடுப்பு எடுக்காமல், குறைந்த கூலி வாங்கிக் கொண்டு செய்து முடிக்கின்றனர். எனவே, அங்குள்ள பின்னலாடை நிறுவனங்கள் பெரும்பாலும் வடமாநில ஊழியர்களையே வேலைக்கு அமர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அங்குள்ள பூர்வீக மக்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக உள்ளது என்று அங்குள்ள மக்கள் குறை கூறி வருகின்றனர்.

திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் வளர்ச்சிக்கு தென்மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் இருந்துவந்த நிலையில், இப்போது கூலியைக் காரணம் காட்டி தமிழ் நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பின்னலாடை நிறுவனங்களில் வேலை கிடைப்பது அரிதாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குறிப்புச் சொற்கள்