சென்னை: சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதை அடுத்து, அவற்றைப் பிடிப்பதற்கென தாம்பரம் மாநகராட்சி புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, பிடிபடும் கால்நடைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தாம்பரம் மேயர் கே. வசந்தகுமாரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பிடிபடும் கால்நடைகளைச் சிரமமின்றிப் பிடிப்பதற்கு ஏதுவாக, தடங்காட்டி (ஜிபிஎஸ்), நீராற்றலால் இயங்கும் உயர்த்தி (hydraulic lift) உள்ளிட்ட வசதிகளை ரூ.28 லட்சம் மதிப்பிலான அவ்வாகனம் கொண்டுள்ளது.
இதன்மூலம் கால்நடைகளுக்கும் அவற்றைக் கையாள்வோர்க்கும் காயம் ஏற்படுவதைக் குறைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
“மாதந்தோறும் எல்லாப் பகுதிகளுக்கும் எங்களால் செல்ல முடிவதில்லை. வாடகை வாகனங்களும் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. ஒரு நேரத்தில் ஒரு மாட்டைச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கும்,” என்றார் துப்புரவு ஆய்வாளர் எஸ். ராஜு.
இந்நிலையில், புதிய வாகனம் மூலம் ஒரே நேரத்தில் ஐந்து, ஆறு கால்நடைகளைப் பிடிக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் கால்நடைகள் கொண்டமங்கலம் தொழுவத்திற்குக் கொண்டுசெல்லப்படும்.
இதனிடையே, மாடம்பாக்கம், திருநீர்மலைப் பகுதிகளிலும் மாட்டுத் தொழுவங்கள் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மாடுகளின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தி அத்தொழுவங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதன்மூலம் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதைக் குறைக்கலாம் என்று மாடம்பாக்கம் குடியிருப்பாளர் நலச் சங்கத்தைச் சேர்ந்த திரு செந்தில் ஜெயபிரகாஷ் கூறினார்.

