புதுடெல்லி: தமிழர்கள் எழுவரின் விடுதலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தாம் பெரிதும் நம்பி இருப்பதாக தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
அண்மைய பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது கூட்டணி கட்சித் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்து இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளை அண்மையில் டெல்லி அழைத்துச்சென்றார் திருமாவளவன்.
அங்கு இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தமிழர்கள் எழுவர் விடுதலை விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நல்ல முடிவு எடுப்பார் என்றும் அவரைத்தான் பெரிதும் நம்பி இருப்பதாகவும் திருமா
வளவன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்த தலைவர்களில் திருமாவளவனும் ஒருவர். இந்நிலையில் அவரது இந்தப் பேட்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களை வெகுவாக ஆச்சரியப்பட வைத்துள்ளது.

