சென்னை: தமிழின் பெருமையை எடுத்துச் சொல்ல பிற மொழிகளைத் தெரிந்துகொள்வது அவசியம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஓர் இந்திய மொழி மற்றும் ஓர் உலக மொழி கற்பிக்க வேண்டும் என 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆணை பிறப்பித்தார்.
அவர்கள் காட்டிய பாதையில் உலக மொழியான பிரஞ்சு மற்றும் மராட்டி, வங்கம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றைத் தேர்வுசெய்து நிதி ஒதுக்கி உள்ளோம். 101 மாணவர்களிடம் கருத்துக் கேட்ட பிறகுதான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். தமிழின் பெருமையைப் பிற நாடுகளுக்கு எடுத்துச் சொல்ல மற்ற மொழிகளைத் தெரிந்துகொள்வது அவசியம். எந்த மொழிகளைப் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்.
இவை விருப்பப் பாடமே தவிர கட்டாயப் பாடங்கள் அல்ல. இன்னொரு மொழியைப் படிக்கும்போது நம் மொழியையும் கூடுதலாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமையும் என்பது கற்றறிந்த தங்கம் தென்னரசுவுக்குத் தெரியும். தமிழ் வளர்ச்சித்துறை நடவடிக்கைகளைச் சட்டமன்றத்தில் துரைமுருகன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பாராட்டி உள்ளனர்.
கலைச்சொற்கள் உருவாக்கத்திற்காக திமுக ஆட்சியில் நிதியே ஒதுக்கப்படவில்லை. தமிழால் வளர்ந்தது திமுக. தமிழுக்கான கட்டமைப்பை வலுப்படுத்தியது அதிமுக. திமுக ஆட்சியில் ஒரு வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்திலாவது தமிழ் இருக்கை அமைக்கப்பட்டதா? கீழடி நாகரிகம் பாரத நாகரிகம்; தமிழர் நாகரிகம் அல்ல என்று நான் சொன்னதாக நச்சுக் கருத்தைப் பதிய வைக்கின்றனர். கந்தக பூமியில் இருந்து வந்தவன் நான். தங்கம் தென்னரசு பேச்சுக்கு அஞ்சமாட்டேன்.
“அடிப்படையில் இந்தி கற்பதால் என்ன தவறு? தமிழுக்கு முதன்மை என்பதே அதிமுக அரசின் உயிர் மூச்சு. “இங்கு இந்தி திணிக்கப்படவில்லை. ஆண்டுக்கு 100 மணி நேரம்தான் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.