நெல்லை: பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக அவதூறா கப் பேசியதாகக் கூறி தமிழறிஞர் நெல்லை கண்ணன் வீட்டை பாஜக, இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டனர்.
கண்ணன்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதை விசாரிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலிசார் சென்றனர்.
அப்போது கண்ணனுக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் அவருடைய குடும்பத்தினர் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பின் நெல்லை கண்ணனை ஆம்புலன்சில் ஏற்றி நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் கண்ணன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன் பும் தரையில் அமர்ந்து நெல்லை கண்ணனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் கோஷமிட்டனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலிசார் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அங்கு திமுக, காங்கிரஸ் நிர்வாகிகளும் வந்ததால் மருத்துவமனை வளாகம் ஒரே பரபரப்பாக இருந்தது.
இஸ்லாமியர்கள் யாரேனும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ‘செய்வார்கள்’ என எண்ணியதாக கண்ணன் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதி வில் “நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, மதத்தால் நாட்டைத் துண்டாட முயலும் பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதவேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன் முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித் தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனி நபரல்ல! ஒட்டு மொத்த தமிழர்களின் சொத்து!” என்று தெரிவித்துள்ளார்.
எனினும் தனிப்பிரிவு போலிசார் நெல்லை கண்ணனைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தால் உடனடியாக கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.