ரஜினிக்கு உதயநிதி பதிலடி

சென்னை: முரசொலியை கையிலேந்தி பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுககாரன். நானும் திமுககாரனே என்று ரஜினியின் கருத்தை சுட்டிக்காட்டி அவருக்கு பதிலடி  கொடுத்துள்ளார்  திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழா சென்னை கலை வாணர் அரங்கில் நேற்று   முன்தினம் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியது அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 

துக்ளக் வார இதழ் குறித்தும் சோ ராமசாமி குறித்தும்  புகழ்ந்து பேசிய ரஜினி, துக்ளக்கை உயர்த்திப் பிடிக்கிறேன் என திமுகவை பட்டும்படாமல் லேசாக விமர்சிக்கவும் செய்தார்.

“சோ ஒரு மிகச்சிறந்த அறிவாளி. அவர் அறிவாளி என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை பத்திரிகை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். 

“ஒருவர் முரசொலி வைத்திருந்தால் அவர் திமுககாரர் என்று கூறிவிடலாம். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று கூறிவிடலாம். 

“தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. சோ மாதிரியான பத்திரிகையாளர்தான் தற்போது மிக அவசியம். பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்கக்கூடாது. 

“கவலைகளை நிரந்தரமாக்கிகொள்வதும் தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில்தான் உள்ளது,” என்று ரஜினி பேசினார்.

“அறிவாளிகள் முரசொலியை படிக்கமாட்டார்களா ரஜினி?”  என்று பலரும் சமூகவலைத் தளங்களில் வினா எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில்,  ரஜினியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில், “முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா- கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம் கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில் முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுக காரன். நான் திமுககாரன். பொங்கல் வாழ்த்துகள்,” என்று பதிவிட்டுள்ளார்.