சென்னை: சென்னையில் கொவிட்-19 தொற்று படிப்படியாகக் குறைந்து வந்தது. ஆனால் கடந்த நான்கு நாட்களில் தொற்று மீண்டும் கூடி வருகிறது.
தலைநகரில் ஏறக்குறைய இரண்டு மாத காலத்தில் முதன்முதலாக ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 1,000க்கும் குறைவாக இருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களில் நாள்தோறும் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1,200ஐ தொட்டுவிட்டது. கிருமி தொற்றி இருப்போரின் மொத்த எண்ணிக்கையும் கூடி வருகிறது.
இந்நிலையில், நகரின் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் கொவிட்-19 பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும்படி ஆலோசனை கூறப்பட்டு உள்ளது.
இ-பாஸ் எனப்படும் அனுமதி தளர்த்தப்பட்டு இருப்பதால் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தலைநகருக்கு வருவோரை உடனடியாகத் தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தும்படி அதிகாரிகள் களப்பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.
இ-பாஸ் விதிகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த சில நாட்களில் அன்றாடம் சுமார் 20,000 பேர் சென்னை செல்ல அனுமதி பெறுவதாகத் தெரிகிறது.
தொழிற்சாலை, அலுவலகம் செல்வோர், வியாபாரம் நிமித்தம் செல்பவர்கள் போன்ற பலரையும் அணுக்கமாகக் கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ள இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற விதிகளை மக்கள் கடுமையாகப் பின்பற்றுகிறார்கள் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

