ஓசூர்: கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால், பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள் வருவாயின்றி பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளன.
இதன்காரணமாக, 10,000 பள்ளி கள் மூடப்பட உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
"மாநிலத்தில் ஏறக்குறைய 10,000 பாலர், தொடக்கப்பள்ளிகளின் வருமானம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவற்றை மூடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என தமிழக பாலர், தொடக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் நந்தகுமார் கூறியுள்ளார்.
ஓசூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "தமிழகத்தில் செயல்படும் 10,000 பள்ளிகளில் பெரும்பாலானவை வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருவதால் மின் கட்டணம், சொத்துவரியைச் ெசலுத் தும் தேவை உள்ளது.
"கொரோனா காலம் என்பதால் கடந்த 2019 முதல் கல்விக் கட்டணங்கள் முறையாகச் செலுத்தப் படாமல் நிலுவையில் உள்ளதால், வரிகளைக் கட்டமுடியாத சூழலும் நிலவுகிறது.
"பெற்றோரிடம் 75% கல்விக் கட்டணங்களை வசூலிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் 25% பள்ளிகள் கூட அந்த 75% கட்டணங்களைப் பெறவில்லை.
"இதனால், ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள், பணி யாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளிகளை நடத்துவதற்கு வாங்கிய கடனைக் கட்டமுடியாத நிலை யில், 10,000 பள்ளிகளையும் மூடி விட முடிவு செய்துள்ளோம்.
"எனவே, எங்கள் பள்ளிகளையும் 50 லட்சத்துக்கும் மேலான மாணவர்களையும் தமிழக அரசே எடுத்துக்கொள்ளட்டும். பள்ளிகளை மூடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை," என்று நந்தகுமார் கூறினார்.

