புதுக்கோட்டை: திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது காதலியைக் கர்ப்பிணியாக்கிவிட்டு, திருமணம் செய்துகொள்ளாமல் கம்பி நீட்டிய ஆடவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு பிணை வழங்கப்பட்டி ருந்த நிலையில், நீதிபதியின் எச்சரிக்கையை அடுத்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த கோவிலில் வைத்து காதலிக்குத் தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடக்கிபட்டியைச் சேர்ந்த கஸ்தூரி, 23, உறவினரான ராம்கியை, 30, காதலித்து வந்தார்.
கஸ்தூரி இரண்டு மாத கர்ப்பமான நிலையில், அவரைத் திருமணம் செய்ய ராம்கி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் கஸ்தூரி புகார் அளித்தார். பலாத்கார வழக்கில் ராம்கி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் இடைக்காலப் பிணை பெற்று வெளியே வந்த ராம்கி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு முன்னிலையானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் காதர், "ராம்கி தனது காதலியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும். இல்லாவிடில் நீண்டகாலம் அவர் சிறையிலேயே இருக்கநேரிடும்," என எச்சரித்தார்.
அத்துடன் இரு குடும்பத்தினரும் சமரசம் பேசி இப்பிரச்சிைனக்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீண்ட காலம் மீண்டும் சிறையா? என்று அதிர்ச்சி அடைந்த ராம்கி, காதலி கஸ்தூரியைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் போலிஸ் பாதுகாப்புடன் இருவரும் மாலை மாற்றிக்கொள்ள, ராம்கி தனது காதலிக்குத் தாலி கட்டினார். திருமணம் முடிந்தபின் ராம்கி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவரது பிணை மனு உடனடியாக விசாரணைக்கு வருவதாகவும் போலிசார் தெரிவித்தனர்.