விழுப்புரம்: தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்துள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் எந்த ஓர் அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளதாகவும் 78.47% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 85.31% வாக்குகளும் குறைந்தபட்சமாக காஞ்சிபுரத்தில் 72.33% வாக்குகளும் பதிவாகி உள்ளதாகவும் அது கூறியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் 77.43% வாக்குகள் பதிவாகியிருந்த நிலை யில் முதற்கட்ட, இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை அக்டோபர் 12ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.
இதற்கிடையே, வாக்குச் சுத்தம் சொல்லிலும் இல்லை செயலிலும் இல்லை என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரி வித்துள்ளார்.
அய்யப்பன்தாங்கலில் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஸ்ரீதேவி என்பவரின் வாக்கு கள்ள வாக்காக ஏற்கெனவே பதிவானதாக குறிப்பிட்டுள்ளவர், மநீம வேட்பாளர் அரவிந்த் கிருஷ்ணாவின் போராட்டத்திற்குப் பிறகே ஸ்ரீதேவிக்கு 'சேலஞ்ச்' வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களிலும் அக்டோபர் 6, 9 ஆகிய இரு தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.