சிவகங்கை: தமிழகத்தில் கடந்த 19 மாதங்களாக மூடிக்கிடந்த ஏறக்குறைய 32,000 தொடக்க, நடு நிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன.
பள்ளிக்கு வருகை தரும் முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஒரு விருந்தினரைப் போல் முகமலர்ச்சியுடன் வரவேற்கும்படி முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோரை அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மாநிலம் முழு வதும் உள்ள பள்ளிகளில் வித்தியாசமான முறையில் மாணவர்களுக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
ரோஜா மலர்க்கொத்து, இனிப்புகள், பேண்ட் வாத்தியம்; மேளதாளம் முழங்க, கிரீடங்கள், மலர் மாலைகள் சூட்டி மாணவர்கள் விதவிதமாக பள்ளிக்கு வரவேற்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்களை வரவேற்க குன்றக்குடி முருகன் கோவில் யானை சுப்புலட்சுமியை அழைத்து வந்து மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர்.
முதுகுளத்தூர் அருகே கரகாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டங்கள் ஆடி மாணவர்களுக்கு மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த தலைமை ஆசிரியர் கலை முருகனின் செயலும் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
ஆறு மாவட்டங்களில் விடுமுறை
திருவாரூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், வேலூர், கள்ளக்குறிச்சி ஆகிய ஆறு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக மூடப்பட்டுக் கிடந்த பள்ளி கள், நேற்று தொடங்கப்பட்ட நாளிலேயே விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்களும் பெற்றோரும் வருத்தமுற்றனர்.
ஆரஞ்சு, சிவப்பு நிற எச்சரிக்கை
டெல்டா மாவட்டங்கள் உட்பட ஒன்பது மாவட்டங்களில் தீபாவளி வரை மிதமான கனமழை பெய்யும் எனக் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இம்மாவட்டங்களுங்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இதற்கிைடயே, கன்னியாகுமரிமாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் அங்குள்ள தாமிரபரணி, குழித்துறை, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.