மதுரை: வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டிருந்த 10.5% உள் இடஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
"சாதிவாரியாக முறைப்படி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்கியது தவறானது," என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக மாலை மலர் ஊடகத் தகவல் குறிப்பிட்டுள்ளது.
நீதிபதிகளின் ரத்து உத்தரவு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
வன்னியர்களுக்கு இவ்வாண்டு முதல் கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்கவேண்டும் என பாமக தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்ைகயும் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வந்த வழக்கு தொடர்பில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டபோது, 10.5% உள் இட ஒதுக்கீட்டுக்கான அரசாணை ரத்து செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதிகள், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது. சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்கவேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்கமுடியும்? என்று கேள்வி எழுப்பினர்.
நாங்கள் கேட்ட ஆறு கேள்விகளுக்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, இடஒதுக்கீடு செல்லாது என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை சட்டத்திற்கு முரணானது. முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீடு வழங்கியது மிகவும் தவறான அணுகுமுறை.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள்