சென்னை: தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை வரும் 2022ஆம் ஆண்டில் குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு துறைகளில் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஒரு ரூபாய்கூட நிதித்துறையின் கண்காணிப்பு இல்லாமல் செல்லக் கூடாது என்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகத்தின் பொது நிதி மேலாண்மை குறித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
"பல்வேறு துறைகளில் செலவு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்ட தொகை, வேறு பணிக்காக மாற்றப்பட்டு நிதித் துறை கண்காணிப்பில் இல்லாமல் பல்வேறு இடங்களில் இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதை கண்டறிய நிதித்துறை மூத்த அதிகாரியின்கீழ் சிறப்புப் பணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இக்குழுவின் ஆய்வில் அரசாங்கக் கணக்குக்கும், வங்கிகளின் கணக்குக்கும் நிறைய குளறுபடிகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. துறைகளில் செலவு செய்யப்படும் ஒரு ரூபாயைக்கூட கண்காணிப்புடன் செலவுசெய்யும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். வழங்கப்பட்ட நிதி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால், அவை அப்படியே முழுமையாக அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்," என்றார் அவர்.