16,000 ஏக்கருக்கு மேல் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம்.
சென்னை: தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபாவளி வரை பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.
இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவாரூர், கரூர், திருப்பத்தூர், வேலூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடலூர், புதுக்கோட்டை, நாமக்கல், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைவிடாது கனமழை பெய்து வருவதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பள்ளி களுக்கு நேற்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே தஞ்சை, நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுமார் 10,000 ஏக்கரில் சம்பா இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி உள்ளது. மேலும் மழை இடைவிடாது பெய்து வருவதால் வயல்வெளிகள் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்திலும் தொடர் மழையால் 10,000 ஏக்கரில் மழைநீர் சூழ்ந்து நெற் பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளது. பிரசித்தி பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் அதனை வடியவைக்கும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன.
நாகை மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான குறுவை நெற்பயிர்கள் மற்றும் சம்பா-தாளடி இளம் நாற்றுகள் உள்பட சுமார் 6,000 ஏக்கரில் மூழ்கி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 300 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயத்தில் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரி வித்தனர்.
இந்த மழை இன்னும் நான்கு நாட்களுக்குத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் தற்போது டெல்டா மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் விவசாயிகள் செய்வது அறியாது கவலை அடைந்துள்ளனர்.