சென்னை: சென்னையில் இருந்து இலங்கை வழியாக துபாய் செல்ல முயற்சி செய்த 42 பேரின் பயணத்தை 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம் திடீரென ரத்து செய்ததால் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சென்னையிலிருந்து கொழும்பு செல்லும் 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.
அதில் 144 பயணிகள் இருந்தனர். அவர்களில் 42 பேர் கொழும்பு வழியாக துபாய் செல்பவர்கள். கொழும்பில் இருந்து மற்றொரு 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் வாயிலாக அவர்கள் துபாய் செல்ல முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.
ஆனால் அவர்களை 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' ஊழியர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை. இதனால், 42 பயணிகளும் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்குப் பதலளித்த அதிகாரிகள், "சென்னையில் செய்யப்பட்ட கிருமித்தொற்று சோதனை முடிவுகள் ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லும். கொழும்பில் இருந்து துபாய்க்கு உடனடியாக விமானம் இல்லை. அந்த விமானத்தில் ஏறினாலும், துபாய் விமான நிலையத்தில் வெளியேவிட மாட்டார்கள்.
"பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தி விடுவார்கள். எனவே, நீங்கள் சென்னையில் சோதனை செய்தாலும் இலங்கையிலும் மற்றொரு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு சம்மதம் தெரிவித்தால் விமானத்தில் ஏற்றுகிறோம்," என்று கூறினர்.
ஆனால் பயணிகள் இதனை ஏற்கவில்லை. இதனால் 42 பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 102 பயணிகளுடன் புறப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகள் விமான நிலையத்திற்குள் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முகப்புகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளும் போலிசாரும் அவர்களை சமாதானப்படுத்தி துபாய்க்குச் செல்ல ஏற்பாடு ெசய்தனர்.