சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளியின்போது தொற்றுப் பயம் காரணமாக குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் அரசு போக்கு வரத்துக் கழகங்களில் மொத்தம் உள்ள 20,334 பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டு வருகின்றன. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் தாம் பரம் 'மெப்ஸ்' பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து வெளியூர்களுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் இரவு 12 மணி நிலவரப்படி மொத்தம் 5,932 பேருந்துகளில் 2,34,918 பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதுதவிர நேற்று அதிகாலை வரை 60 ஆயிரம் பயணிகள் வெளியூர் சென்றனர்.
மொத்தம் இதுவரை 3 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இன்று தீபாவளி என்பதால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்ல 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வரலாம்.